8.1 C
New York
Friday, April 19, 2024

Buy now

spot_img

அனந்தனுக்கு ஆயிரம் திருநாமங்கள் விஷ்ணு ஸஹஸ்ரநாமக்கதைகள்

அனந்தனுக்கு ஆயிரம் திருநாமங்கள்

விஷ்ணு ஸஹஸ்ரநாமக்கதைகள்

❇️நல்ல ஆரோக்கியத்தையும், நீங்காத செல்வத்தையும், மன நிம்மதியையும் தரவல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.

❇️உடலுக்கு ஏற்பட்ட நோய்கள் மட்டுமின்றி ஆத்மாவைப் பீடித்துப் படுத்தும் நோயாகிய பிறவிப் பிணியையும்
போக்க வல்ல மருந்து
விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.

❇️அந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலுள்ள 1000 திருநாமங்களின் பொருளை எளிய கதைகள் மூலம் உணரலாம், வாருங்கள்.

28~ஸ்தாணவே நம: (Sthaanave namaha)

❇️திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் திருநகரியிலிருந்து திருமலை யாத்திரை சென்ற திருமால் அடியார்கள்,
வழியில் மதுராந்தகத்தில் ஏரிகாத்த ராமரைத் தரிசித்துவிட்டு, மதுராந்தகம் ஏரிக்கரையில் தாங்கள் கொண்டு வந்திருந்த
பொருட்களைக் கொண்டு தாங்களே உணவு தயாரித்து உண்டார்கள்.

❇️நம்மாழ்வார் அருளிச் செய்த
திருவாய்மொழிப் பாசுரங்களைச் சொல்லியபடியே அந்த அடியார்கள் உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள்.

❇️உணவின் வாசனையால் ஈர்க்கப்பட்ட ஓர் உடும்பு அவர்களருகில் வந்தது.

❇️அந்தக் கூட்டத்தில் உணவருந்தி முடித்த ஒரு சிறுவன் திருவாய்மொழியின் நிறைவு வரியிலுள்ள “பிறந்தார் உயர்ந்தே” என்ற
தொடரைச் சொல்லியபடி வாயைக் கொப்புளித்தான்.

“பிறந்தார் உயர்ந்தே” என்று சொன்னபடி அவன் கொப்புளித்த அந்தத் தண்ணீர்
அந்த உடும்பின் மேல் தெறித்தது.

❇️அந்தத் தண்ணீரை அருந்திய உடும்பு திகைத்துப்போய் நின்றது.

❇️திருமலைக்குச் சென்று ஏழுமலையானைத் தரிசித்துவிட்டு வரும் வழியில் மீண்டும் மதுராந்தகம் ஏரிக்கரையில் அந்தத் திருமால்
அடியார்கள் உணவு சமைத்து உண்டார்கள்.

❇️ஆனால், இம்முறை அவ்விடத்தில் அந்த உடும்பைக் காணவில்லை.

❇️வருடங்கள் பல கடந்தன. காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவனின் மகளை ஒரு
பேய் பிடித்துக் கொண்டது.

❇️அதை விரட்டவேண்டும்
என்று காஞ்சியில் இருந்த யாதவப்பிரகாசர் என்ற பண்டிதரை அழைத்தான் மன்னன்.

❇️அவரும் தன் சீடர்களுடன் அரண்மனைக்கு வந்தார்.

❇️சிறிது நேரம் தியானம் செய்து விட்டு, மந்திரத்தால் தூய்மையாக்கப்பட்ட நீரை
இளவரசிமேல் தெளித்தார்.

“ஏ பிசாசே! இந்தப் பெண்ணை விட்டு ஓடிவிடு!” என்றார்.

“ஏ உடும்பே! உன்னைக் கண்டு நான் அஞ்ச மாட்டேன்!

❇️உன் முன்பிறவி பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.

❇️மதுராந்தகத்தில் உடும்பாக இருந்த நீ, திருவாய்மொழிப் பாசுரங்களைக் கேட்டதன் விளைவாகவும், திருமால் அடியவனான
ஒரு சிறுவன் வாய் கொப்புளித்த தீர்த்தம் உன்மேல் பட்டதன் விளைவாகவும் தான் இன்று ஒரு பண்டிதனாக விளங்குகிறாய்.

❇️உன் மந்திரம் என்னை எதுவும் செய்யாது!

❇️உன் சீடர்களுள் ராமாநுஜர் என்று ஒரு மகான் இருக்கிறாரே!

❇️அவரது இரு திருவடிகளையும் என் தலைமேல் வைக்கச்சொல்!

❇️நான் இளவரசியின் உடலை விட்டுச் செல்கிறேன்.

❇️நான் சென்றதற்கு அடையாளமாக அரண்மனைக்கு அருகில்
உள்ள புளியமரம் கீழே சாய்ந்துவிடும்!” என்றது
அந்தப் பிசாசு.

❇️யாதவப்பிரகாசரிடம் அப்போது சீடராக இருந்த ராமாநுஜர் தம் இரு திருவடிகளையும் அந்தப் பெண்ணின் தலையில் வைக்க,
பிசாசும் அவளை விட்டு விலகியது, புளியமரமும் பெருத்த ஒலியுடன் கீழே சாய்ந்தது.

❇️ஏற்கெனவே ராமாநுஜர் தன்னை மிஞ்சிய
சிஷ்யராக விளங்கியதைக் கண்டு பொறாமை கொண்ட குரு யாதவப்பிரகாசர், இப்போது தன்னுடைய முன்பிறவியின் வரலாற்றையும்,
ராமாநுஜரின் மேன்மைகளையும் அறிந்ததால் மேலும் ராமாநுஜர் மேல் பொறாமை கொண்டார்.

❇️ராமாநுஜரையே கொல்லத் துணிந்து அவரைக் காசியாத்திரைக்கு
அழைத்துச் சென்றார்.

❇️கங்கையில் தள்ளி ராமாநுஜரை மாய்க்க வேண்டும் என்பதே யாதவப்பிரகாசரது திட்டம் என்பதை விந்திய மலை அடிவாரத்தில்
ராமாநுஜருக்கு அவரது தம்பி கோவிந்தபட்டர் தெரிவிக்கவே, ராமாநுஜர் யாத்திரையைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு
காஞ்சிபுரத்துக்குத் திரும்பினார்.

❇️பின்னாளில் தன் தவறுகளை உணர்ந்த யாதவப்பிரகாசர், திருவரங்கத்தில் எழுந்தருளியிருந்த
ராமாநுஜருடைய திருவடிகளைப் பற்றி அவருக்குச் சீடரானார்.

❇️தான் செய்த தவறுகளுக்குத் தன்னை மன்னித்தருளும்படி
ராமாநுஜரை வேண்டினார்.

❇️ராமாநுஜருடைய திருவடி சம்பந்தத்தால் முக்தியும் பெற்றார்.

❇️இந்நிகழ்ச்சிகளை நோக்குகையில் இவை அனைத்தும் எம்பெருமான் செய்த லீலை என்பது
நன்கு விளங்கும்.

❇️ஏனெனில் தன் கருணையால் உடும்பாக இருந்த ஒருவரை யாதவப்பிரகாசர் என்னும் பண்டிதராக்கி,அதன்பின் அவரை ராமாநுஜருக்குச் சீடராகவும் ஆக்கி, இறுதியில் அவருக்கு எம்பெருமான் முக்தியும் அருளிவிட்டான்.

❇️இவ்வாறு எல்லையில்லாத, அழிவில்லாத தன் அருட்பார்வையால் ஈ, எறும்பு முதலிய உயிரினங்களுக்குக் கூட கருணை புரிந்து
அவற்றை ஜனன-மரண சுழற்சியிலிருந்து விடுவிப்பவனான எம்பெருமான் ‘ஸ்தாணு:’ என்றழைக்கப்படுகிறான்.

“ஸ்தாணவே நம:” என்று தினமும் சொல்லி வந்தால் நாமும் திருமாலின் எல்லையற்ற கருணையை அநுபவிக்கலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!